புகழனைத்தும் ஏக வல்லவனாம் அல்லாஹ்வுக்கே உரித்தாகுக.
நன்மைகளை பல மடங்காக்கித் தரும், 1௦௦௦ மாதங்களை விட சிறந்த ஒரு இரவை தன்னகத்தே கொண்டுள்ள, சிறந்த மாதமாகிய ரமழான் மாதம் எம்மை அடைந்து விட்டது.
எனவே ராமழானின் ஒழுங்கு மற்றும் அதன் சட்ட திட்டங்கள் பற்றிய ஒரு சுருக்கமான கையேட்டை இங்கு முன்வைக்கிறேன்.
எனவே இதனைக் கொண்டு அல்லாஹ் எமக்கு ஈருலகிலும் பிரயோசனமளிப்பானாக.
1. ரமழான் மாதத்தில் நோன்பு நோற்பது கடமையாகும்.
அல்லாஹ் கூறுகிறான்:
ரமழான் மாதம் எத்தகையதென்றால் அதில் தான் மனிதர்களுக்கு (முழுமையான வழிகாட்டியாகவும்தெளிவான சான்றுகளைக் கொண்டதாகவும்நன்மை - தீமைகளைப்) பிரித்தறிவிப்பதுமான அல் குர்ஆன் இறக்கியருளப் பெற்றது. ஆகவேஉங்களில் எவர் அம்மாதத்தை அடைகிறாரோஅவர் அம்மாதம் நோன்பு நோற்க வேண்டும்”
2. நோன்பு ஏற்றுக் கொள்ளப் படுவதற்கான முக்கிய காரணிகள். (தூண்கள்):
- இரவில் நிய்யத்து வைத்தல்.
- உணவு, பானம், மனைவியுடன் உடலுறவு கொள்ளல் போன்றவற்றிலிருந்து தவிர்ந்து கொள்ளல்.
“யார் பஜ்ருக்கு முன்னால் நோன்பு நோற்பதற்கு நாடவில்லையோ அவருக்கு நோன்பு இல்லை” என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லாம் அவர்கள் அவர்கள் கூரியதாக ஹப்ஸா ரழியள்ளாஹு அன்ஹா கூறினார்கள்.
3. நோன்பின் பயன்கள்
- அது பாவமான காரியங்களிலிருந்து பாதுகாக்கும்.
- நோன்பாளியின் வாயில் இருந்து வீசும் வாடை அல்லாவிடத்தில் “மிஸ்க்” கஸ்தூரியை விட வாசமாகும்.
- இதற்குரிய கூலியை அல்லாஹ் மாத்திரம்தான் அறிகிறான்.
- நோன்பாளிகளுக்கு சுவனத்தில் நுழைவதற் கென ரய்யான் என்ற ஒரு கதவை வைத்துள்ளான்.
- யார் ஈமான் கொண்டு, நன்மையை எதிர் பார்த்து நோன்பு நோற்கிறாரோ அவருடைய முந்திய பாவங்கள் மன்னிக்கப் படும்.
4. நோன்பாளிக்கு ஆகுமாக்கப்பட்ட செயல்கள்:
- இரவில் உண்ணல், பருகல், மனைவியுடன் உறவு கொள்ளல்.
- குளித்தல்.
- பல் துலக்கல்.
- வுளூவின் போது தொண்டையூடாக நீர் செல்லா விதமாக வாய் கொப்பளித்தல்.
- தேவை ஏற்படும்போது தொண்டைக்குள் உட்புகாமல் உணவின் சுவையைப் பார்த்தல்.
- பிரயாணம் செய்தல்.
- வாசனைத் திரவியங்கள் பாவித்தல்.
5. நோன்பை முறிக்கக் கூடிய காரியங்கள்:
- வேண்டுமென உண்ணல், பருகல்.
- இச்சையுடன் மனைவியை நெருங்குதல்.
- வேண்டுமென வாந்தி எடுத்தல்.
- உடம்பின் சக்தியை (பலத்தை) அதிகரிக்க ஊசி ஏற்றல், மற்றும் இரத்தம் ஏற்றல்.
- பெண்களுக்கு ஹய்ல், நிபாஸுடைய இரத்தம் வெளியேறல்.
6. நோன்பாளிக்கு வலியுறுத்தப்பட்ட காரியங்கள்:
- ஸஹர் உணவை பஜ்ருடைய நேரத்துக்கு சற்று முன் வரை பிற்போடல்.
- மஃரிபுடைய அதானுடன் நோன்பு திறத்தல்.
- ருதபை (அரைப் பழுத்த ஈத்தம்பழம்) கொண்டு நோன்பு திறத்தல், கிடைக்காத பட்சத்தில் ஈத்தம்பழம், அல்லது நீரைக் கொண்டு திறத்தல்.
- நோன்பு திறக்க முன்பும், நோன்பு திறந்த பின்பும் பிரார்த்தித்தல்.
7. யார் மீது நோன்பு கடமை?
- முஸ்லிமான, பருவமடைந்த, புத்தியுள்ள, சக்தி வாய்ந்த, பிரயாணியல்லாதவர்கள், மீது கடமையாகும்.
8. இம்மாதம் நோன்பு நோற்க விதிவிலக்களிக்கப்பட்டவர்கள்.
- புத்தியை இழந்தவர்கள் .
- பருவ வயதை அடையாதவர்கள்.
- ஹய்ல் ஏற்பட்ட பெண்கள்.
- அல்லாஹ்வின் பாதையில் பிரயாணம் செய்பவர்கள்.
- நோயாளிகள்.
- வயது முதிர்ந்தோர்.
- கர்ப்பிணி, பாலூட்டும் தாய் மார்கள்.
குறிப்பு:
- பிரயாணி, நோயாளி, கர்ப்பிணி / பாலூட்டும் தாய்மார், ஹய்ல் ஏற்பட்ட பெண்கள். (இவர்கள் நோன்பு நோற்கத் தடையாக இருந்த) காரணம் நீங்கிய பின் ஏனைய நாட்களில் அவற்றை (“களா”) மீளப் பிடிக்க வேண்டும்.
- வயது முதிர்ந்தோர், அல்லது தீராத நோயுள்ளோர் , “பித்யா” அதாவது ஒரு நோன்புக்கு ஒரு ஏழைக்கு ஒரு நேர உணவு வழங்க வேண்டும்.
9. இம்மாதத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டிய நற் செயல்கள்:
- நோன்பு நோற்றல்.
- இரவுத் தொழுகையைப் பேணல்.
- அதிகமாக தான தர்மங்கள் கொடுத்தல்.
- மற்றவர்களுக்கு உணவளித்தல்.
- நோன்பு திறக்கப் பிறருக்கு உதவுதல்.
- இறுதிப் பத்தில் இஃதிகாப் இருத்தல்.
- வசதி படைத்தால் உம்ரா செய்தல்.
- குர் ஆனை அதிகமாக ஓத முயற்சித்தல்.
- ஆயிரம் மதங்களை விட சிறந்த இரவாகிய லைலதுல் கதுருடைய இரவை அடைந்து கொள்ள முயற்சி செய்தல்.
எவரொருவர் நம்பிக்கையுடனும், நன்மையை எதிர்பார்த்தும் ரமழானில் நோன்பு நோற்கிறாரோ அவருடைய முன் செய்த பாவங்கள் மன்னிக்கப்படும் என நபி ஸல்லள்ளஹு அலைஹி வஸல்லாம் அவர்கள் நவின்றுள்ளார்கள். (நூல்:புகாரி, முஸ்லிம்)
எவரொருவர் நம்பிக்கையுடனும், நன்மையை எதிர்பார்த்தும் ரமழானில் நின்று வணங்கினாரோ அவருடைய முன் செய்த பாவங்கள் மன்னிக்கப்படும் என நபி ஸல்லள்ளாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நவின்றுள்ளார்கள். (நூல்:புகாரி, முஸ்லிம்)
அல்லாஹ் கூறுகிறான்:
மேலும்அவர்கள் அ(வ்விறை)வன் மீதுள்ள பிரியத்தினால் ஏழைகளுக்கும்அநாதைகளுக் கும்சிறைப்பட்டோருக்கும் உணவளிப்பார்கள்.
“எவரொருவர் ஒரு நோன்பாளியை நோன்பு திறக்க வைக்கிறாரோ, அவருக்கு அதே அளவு நன்மையுண்டு...” என நபி ஸல்லள்ளஹு அலைஹி வாஸல்லாம் அவர்கள் நவின்றுள்ளார்கள்.
“ரமலானில் ஒரு உம்ரா செய்வது ஒரு ஹஜ் செய்த நன்மையை தரும்” என நபி ஸல்லள்ளஹு அலைஹி வாஸல்லாம் அவர்கள் கூறியுள்ளார்கள்.
அல்லாஹ் கூறுகிறான்:
“கண்ணியமிக்க (அந்த) இரவு ஆயிரம் மாதங்களை விட மிக மேலானதாகும்.”
எனவே இவற்றோடு இன்னும் பல நன்மையான காரியங்களில் நேரத்தைப் பயன்படுத்தி நன்மைகளை அதிகப்படுத்திக் கொள்ள முயற்சிக்க வேண்டும்.
எனவே இந்த மாதத்தை நபியவர்கள் காட்டித் தந்த அடிப்படையில் சரியாகப் பயன் படுத்திக் கொள்ள நம் அனைவருக்கும் அல்லாஹ் தவ்பீக் செய்வானாக.
அல்லாஹ்வின் ஸலவாத்தும் ஸலாமும் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீதும் அவர்களின் கிளையார் தோழர்கள் மீதும் உண்டாவதாக!.