லாஇலாஹ இல்லல்லாஹ் முஹம்மதுர் ரசூலுல்லாஹ்

லாஇலாஹ இல்லல்லாஹ்வின் பொருள் :

‘லாஇலாஹ இல்லல்லாஹ்’ என்பது மார்க்கத்தின் அத்திவாரமாகும். இஸ்லாம் மார்க்கத்தில் இதற்கு மாபெரும் அந்தஸ்து உண்டு. இதுவே இஸ்லாத்தின் கடமைகளில் முதற்கடமையும் ஈமானின் கிளைகளில் மிக உயர்ந்ததுமாகும். எமது செயல்கள் ஏற்றுக் கொள்ளப்படுவதற்கு இக்கலிமாவை மொழிவதும், அதன்படி செயற்படுவதும் முக்கிய நிபந்தனைகளாகும்.

இதன் சரியான அர்த்தம் யாதெனில் ‘உண்மையில் வணங்கப்படுவதற்கு தகுதியானவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை’ என்பதாகும். இது தவிர வேறு அர்த்தம் கொள்ளக்கூடாது.

அல்லாஹ் கூறுகின்றான் :

மேலும், உங்கள் நாயன் ஒரே நாயன் தான், அவனைத் தவிர வேறு நாயனில்லை. அவன் அளவற்ற அருளாளன், நிகரற்ற அன்புடையோன்.

(2:163)                        

இக்கலிமாவில் இரு முக்கிய அம்சங்கள் பொதிந்துள்ளன.
  1. மறுத்தல்: இது, ‘லாஇலாஹ’ – ‘வணக்கத்திற்குரியவன் யாருமில்லை’ என்று நாம் சொல்லும் போது வணக்கத்திற்குரிய தகுதி எவருக்கும் இல்லை என்று உறுதியாக மறுத்துச் சொல்வதாகும்.
  2. உறுதிப்படுத்துதல்: உறுதிப்படுத்துதல் என்பது ‘இல்லல்லாஹ்’ – ‘அல்லாஹ்வைத் தவிர’ என்று நாம் சொல்லும் போது வணக்கத்திற்குரிய தகுதி அல்லாஹ்வுக்கு மட்டுமே உள்ளது. இதில் அவனுக்கு இணையாக யாரும் கிடையாது என உறுதிப்படுத்துவதாகும்.

எனவே அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் வணங்கப்படக்கூடாது. வணக்க வழிபாடுகளில் எவையும் அல்லாஹ் அல்லாதவருக்கு செலுத்தப்படக்கூடாது. யார் இக்கலிமாவின் சரியான பொருளை அறிந்து, இணைவைப்பை நிராகரித்து, ஏகத்துவத்தை உறுதிப்படுத்தி, இதில் பொதிந்துள்ள அம்சங்களை உறுதியாக நம்பி, அதன் பிரகாரம் செயற்படும் உறுதியான நோக்கோடு இதனை மொழிகின்றாரோ அவரே உண்மையான முஸ்லிமாவார். மேற் கூறப் பட்ட அம்சங்களில் நம்பிக்கையின்றி செயற் படுபவன் நயவஞ்சகனாவான். இக்கலிமாவுக்கு மாற்றமாக நடந்து இணைவைப்பவன் காபிர், முஷ்ரிக் ஆவான். அவன் இக்கலிமாவை நாவால் மொழிந்திருப்பினும் சரியே.

லாஇலாஹ இல்லல்லாஹ்வின் சிறப்பு

இக்கலிமாவுக்கு ஏராளமான சிறப்புக்கள் காணப்படுவதோடு, இதனை உறுதியான நம்பிக்கையோடு மொழிபவருக்கு பல பலன்களும் இதன் மூலம் கிடைக்கப் பெறுகின்றன. அவற்றுள் சில:

  1. இதனை உறுதியாக மொழிந்த ஒருவரை நரகின் நிரந்தர வேதனையிலிருந்து இது பாதுகாக்கிறது. இதற்கு ஸஹீஹான பல ஆதாரங்கள் ஹதீஸில் வந்துள்ளன.
  2. மனிதர்களும் ஜின்களும் இதற்காகத் தான் படைக்கப்பட்டுள்ளனர்.
  3. தூதர்கள் அனுப்பப்பட்டதும் வேதங்கள் இறக்கப்பட்டதும் இதற்காகத் தான். அல்லாஹ் கூறுகின்றான்:
  4. இதுவே இறைத்தூதர்களின் முதல் அழைப்பாகவும் காணப்பட்டது. எல்லா இறைத்தூதர்களும் இதன் பக்கம் தான் மக்களை அழைத்தார்கள். அவர்கள் அனைவரும் தம் மக்களிடம்:
  5. இக்கலிமா; அல்லாஹ்வை நினைவு கூறுவதற்கு மிகச் சிறந்ததாகும்.

   ஒரு மணிக்கோதுமை அளவு ஒருவனின் உள்ளத்தில் நன்மையிருக்கும் நிலையில் “லாஇலாஹ இல்லல்லாஹ்” எனக் கூறியவன் நரகிலிருந்து வெளியேற்றப் படுவான். ஒரு தொலிக்கோதுமை அளவு ஒருவனின் உள்ளத்தில் நன்மையிருக்க “லாஇலாஹ இல்லல்லாஹ்” எனக் கூறியவனும் நரகிலிருந்து வெளியேற்றப்ப டுவான். ஒரு மணிச்சோளம் அளவு நன்மை உள்ளத்திலிருக்க “லாஇலாஹ இல்லல்லாஹ்” எனக் கூறியவனும் நரகிலிருந்து வெளியேற் றப்படுவான்.

(நபிமொழி – புகாரி)

அல்லாஹ் கூறுகிறான்:

 மனிதர்களையும் ஜின்களையும் என்னை வணங்குவதற்கல்லாமல் வேறு எதற்காக வும் நான் படைக்கவில்லை

(51:56)

 (நபியே!) உமக்கு முன்னர் அனுப்பிய ஒவ்வொரு தூதரிடமும் நிச்சயமாக வணக்கத்திற்குரிய இறைவன் என்னைத் தவிர வேறுயாருமில்லை. என்னையே வணங்குங்கள் என நாம் வஹி அறிவிக்காமலில்லை.

(21:25)

 “அல்லாஹ்வை வணங்குங்கள் அவனை யன்றி வேறு இறைவன் உங்களுக்குக் கிடையாது” என்றே கூறினார்கள்.

(7:73)

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

“நானும் எனக்கு முன் சென்ற நபிமார்களும் கூறியதில் மிகச் சிறந்தது லாஇலாஹ இல்லல்லாஹ் வஹ்தஹு லாஷரீக்கலஹு – வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை அவன் தனித்தவன் அவனுக்கு  இணையாக எதுவும்  கிடையாது – என்பதாகும்.”

(முஅத்தா)

லாஇலாஹ இல்லல்லாஹ்வின் நிபந்தனைகள்

லாஇலாஹ இல்லல்லாஹ்விற்கு ஏழு நிபந்தனைகள் உள்ளன. ஓர் அடியான் அவற்றில் எந்த ஒன்றிற்கும் முரண்படாமல் அந்த ஏழு நிபந்தனைகளையும் ஒன்றாகப் பற்றிப் பிடித்துக் கொள்ளாத வரையில் அது அல்லாஹ்விடத்தில் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது. அவை:

  1. அறிவு: அதாவது இக்கலிமாவில் உள்ளடங்கியுள்ள மிக முக்கியமான இரு அம்சங்களான; மறுத்தல், உறுதிப்படுத்துதல் என்பவற்றின் பொருளையும் அப்பொருள் வலியுறுத்துகின்ற செயலையும் அறிய வேண்டும்.
  2. உறுதி: அதாவது ஜின், மனித ஷைத்தான்கள் ஏற்படுத்துகின்ற சந்தேகங்கள் வராமல் இக்கலிமாவைத் தெளிந்த உள்ளத்துடன் உறுதியாக மொழிவதை இது குறிக்கிறது.
  3. ஏற்றுக்கொள்ளல்: அதாவது இக்கலிமாவின் உள்ளடக்கம் அனைத்தையும் உள்ளத்தால் உறுதிகொண்டு நாவால் மொழிந்து ஏற்றுக்கொள்ள வேண்டும். நபி (ஸல்) அவர்கள் மூலம் வந்துள்ள எல்லாச் செய்திகளும் உண்மையானவை என்று நம்பி அனைத்தையும் ஏற்றுக்கொள்ள வேண்டும். அவற்றில் எதனையும் மறுத்துவிடக்கூடாது.
  4. வழிப்படுதல்: கலப்பற்ற ஏகத்துவக்கலிமா, எதை அறிவிக்கின்றதோ அதை வழிப்பட வேண்டும். ஏற்றுக்கொள்வதற்கும் வழிப்படுவதற்குமுள்ள வித்தியாசம் என்னவென்றால் ஏற்றுக் கொள்வதென்பது அதற்குரிய சரியான பொருளை வார்த்தையால் வெளிப்படுத்துவது. வழிப்படுதல் என்பது செயல்களால் பின்பற்று வதாகும்.
  5. உண்மை: அல்லாஹ்விடம் உண்மையாக நடந்துகொள்ளுதல். இது அவனுடைய நம்பிக்கையிலும், அடிப்படைக்கொள்கையிலும் உண்மை யாளனாக இருப்பதைக் குறிக்கும்.
  6. மனத்தூய்மை: மனத்தூய்மை என்பது மனிதன் தனது தூய எண்ணத்தைக்கொண்டு ஷிர்க்கின் சாயல்படிந்த அனைத்தைவிட்டும் அவனது செயல்களை சுத்தப்படுத்துவதாகும். அதாவது அவனது சொல், செயல் அனைத்தும் அல்லாஹ்வின் திருமுகத்துக் காகவும், அவனது திருப்தியை நாடியும் கலப்பற்ற முறையில் அவனிடமிருந்து வெளிவர வேண்டும். அதில் முகஸ்துதி, பிறர் பாராட்டு என்பன கலந்துவிடக்கூடாது. மேலும் தனது செயல்களை அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை நாடியும் மறுமை வெற்றியைக் கருத்திற்கொண்டும் அமைத்துக் கொள்வது அவசியமாகும்.
  7. அன்பு:  இம்மகத்தான கலிமாவையும், இதன் உள்ளடக்கத்தையும், இது எதை அறிவிக்கிறதோ அதையும் நேசிக்க வேண்டும். அந்த வகையில் அல்லாஹ்வையும் அவனது தூதரையும் நேசிக்க வேண்டும். ஏனையவர்களை நேசிப்பதை விடவும் அவர்கள் இருவரையும் நேசிப்பதற்கே முன்னுரிமை வழங்க வேண்டும். நேசத்திற்குரிய நிபந்தனைகளையும் அதற்கு அவசியமானவற்றையும் கடைப்பிடிக்கவேண்டும்.

எனவே ஓர் அடியான் நிச்சயமாக அல்லாஹ் மட்டுமே வணக்கத்திற்குரியவன், அவனல்லாதவற்றை வணங்குவதில் பயனில்லை என அறிந்து, அதற்கேற்ப செயற்படுவானேயானால் அவனே இதன் பொருளைத் தெரிந்தவனாவான்.

அல்லாஹ் கூறுகிறான்:

நிச்சயமாக வணக்கத்திற்குரியவ இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை என நீர் அறிந்துகொள்வீராக.

(47:19)

அல்லாஹ் கூறுகின்றான்:

நிச்சயமாக (உண்மையான) மூமின்கள் யாரென்றால் அவர்கள் அல்லாஹ்வையும் அவனது தூதரையும் நம்பிய பின்னர் (அது பற்றி எத்தகைய) சந்தேகமும் கொள்ள மாட்டார்கள்.

(49:15)

அல்லாஹ் கூறுகின்றான்:

 அல்லாஹ்வும் அவனது தூதரும் ஒரு காரியத்தைப் பற்றி கட்டளையிட்டுவிட்டால் அவர்களுடைய அக்காரியத்தில் வேறு அபிப்பிராயம் கொள்வதற்கு எந்த ஒரு மூமினான ஆணுக்கும் பெண்ணுக்கும் உரிமையில்லை.

(33:36)

ஒருவன் லாஇலாஹ இல்லல்லாஹ்வின் பொருளை அறிந்து, அதில் உறுதி கொண்டு அதை ஏற்றுக்கொள்ளவும் செய்கிறான், எனினும் அவன் அறிந்ததற்கேற்ப வழிப்படவில்லையென்றால் அது அவனுக்கு பயனளிக்காது.

அல்லாஹ் கூறுகின்றான்:

 உங்கள் இறைவன்பால் திரும்பி அவனுக்கே முற்றிலும் வழிப்படுங்கள்.

(39:54)

அல்லாஹ் கூறுகின்றான்:

ஈமான் கொண்டவர்களே! அல்லாஹ்வை அஞ்சிக்கொள்ளுங்கள். நீங்கள் உண்மையாளர்களுடன் இருங்கள்.

(9:119)

ஒருவன் இக்கலிமாவை நாவினால் சொல்லிக்கொண்டு அதன் அர்த்தத்தை உள்ளத்தால் மறுத்தால் நிச்சயமாக அது அவனுக்கு ஈடேற்றமளிக்காது. மாறாக அவன் நயவஞ்சகர்களின் கூட்டத்தில் சேர்ந்து விடுவான்.

அல்லாஹ் கூறுகின்றான்:

 அறிந்துகொள்வீராக! தூய்மையான கீழ்ப்படிதல் முற்றிலும் அல்லாஹ்வுக்கே உரித்தானதாகும்.

(39:3)

நபி (ஸல்) அவர்கள் கூறியதாக இத்பான் (ரழி) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ்வின் திருமுகத்தை நாடியவராக லாஇலாஹ இல்லல்லாஹ் என்று யார் கூறினாரோ அவருக்கு அல்லாஹ் நிச்சயமாக நரகத்தை ஹராமாக்கிவிட்டான். (புகாரி,முஸ்லிம்)

ஆகவே அல்லாஹ்வை கண்ணியப் படுத்துதல், மகத்துவப்படுத்துதல், பயப்படுதல், அவனிடம் ஆதரவு வைத்தல் ஆகியவற்றுடன் நேசிக்கவேண்டும்.

அல்லாஹ் கூறுகின்றான்:

 ஈமான் கொண்டவர்களே! உங்களில் யாரேனும் அவனது மார்க்கத்தைவிட்டு மாறிவிட்டால் அப்போது அல்லாஹ் வேறொரு சமுதாயத்தைக்கொண்டு வருவான். அவன் அவர்களை நேசிப்பான். அவர்களும் அவனை நேசிப்பார்கள். அவர்கள் மூமின்களிடம் பணிவாகவும் நிராகரிப்பவர்களுடன் கடினமாகவும் இருப்பார்கள். அல்லாஹ்வின் பாதையில் போர் புரிவார்கள். நிந்தனை செய்வோரின் நிந்தனைக்கு அஞ்சமாட்டார்கள்.

(5:54)

முஹம்மதுர் ரசூலுல்லாஹ்வின் பொருள்

இதன் பொருள் முஹம்மது (ஸல்) அவர்கள்  அல்லாஹ்வின் அடியானும் மனித சமுதாயம் அனைத்திற்கும் அனுப்பப்பட்ட இறுதித்தூதரும் ஆவார்களென அகத்தாலும் புறத்தாலும் ஏற்றுக்கொள்வதும் இதன் உள்ளடக்கத்தின் பிரகாரம் செயற்படுவது மாகும். அதாவது அவர்கள் ஏவியவற்றில் அவர்களுக்கு வழிப்படுவதும், அவர்கள் அறிவித்தவற்றை உண்மைப்படுத்துவதும், அவர்கள் விலக்கியவற்றை விட்டும் விலகிக்கொள்வதும், மற்றும் அவர்கள் மார்க்கமாக்கியவற்றைக் கொண்டு மட்டுமே அல்லாஹ்வை வணங்குவதாகும்.

முஹம்மதுர் ரசூலுல்லாஹ் என சாட்சி சொல்வதில் இரண்டு அம்சங்கள் உள்ளடங்கியுள்ளன. அவை “அப்துஹு” , “வரசூலுஹு” என்பனவாகும்.

இந்த இடத்தில் “அப்து” : என்பதன் பொருள் வணக்கம் புரியும் இறைவனின் அடியார் என்பதாகும். அதாவது நபி (ஸல்) அவர்களும் ஒரு மனிதர்தான். ஏனைய மனிதர்களைப் போன்றுதான் அவர்ளும் என நம்புவதாகும்.

அல்லாஹ் கூறுகின்றான்:

(நபியே!) நீர் கூறுவீராக! நிச்சயமாக நான் உங்களைப் போன்ற ஒரு மனிதன் தான்.

(18:110)

“ரசூல்”: என்பதன் பொருள் சுவர்க்கத்தைக் கொண்டு நற்செய்தி சொல்லவும் நரகத்தைக் கொண்டு எச்சரிக்கை செய்யவும் அல்லாஹ்வின் பக்கம் அழைக்கவும் மனித சமுதாயம் முழுவதற்கும் தூதராக அனுப்பப்பட்டவர் என்பதாகும். இந்த இரு தன்மைகளைக் கொண்டு சாட்சி சொல்வது நபி(ஸல்) அவர்கள் விஷயத்தில் வரம்பு மீறுவதையும் தரக்குறைவாகக் கருதுவதையும் நீக்கிவிடுகின்றது. தம்மை நபி(ஸல்) அவர்களுடைய சமுதாயத்தைச் சேர்ந்தவர் என்று சொல்லிக் கொள்கின்ற பெரும்பாலோர் அவர்கள் விஷயத்தில் வரம்புமீறி அவர்களை அடிமை அந்தஸ்திலிருந்து கடவுள் அந்தஸ்திற்கு உயர்த்திவிடுகின்றார்கள். மற்றும் சிலர் அவர்களின் தூதுத்துவத்தை மருத்து விடுகின்றனர் அல்லது அவர்களைப் பின்பற்றுவதில் வரம்பு மீறி அவர்கள் கொண்டுவந்ததிற்கு மாற்றமான கூற்றுக் களையே ஆதாரமாகக் கொள்கிறார்கள்.          

Choose Your Language