ரமழான் மாத நோன்பை முடித்த பின்னர் வரும் ஈதுல் பித்ர், மற்றும் இஸ்லாமிய நாட்காட்டியின் படி துல்ஹஜ் பிறை 10ம் நாளான ஈதுல் அழ்ஹா ஆகிய இரு தினங்களே முஸ்லிம்களுக்கான பண்டிகைத் தினங்களாகும்.
1. அதன் சட்டம்:
பெருநாள் தொழுகையானது வழியுறுத்தப்பட்ட ஸுன்னாவாகும். அதனை சிலர் தொழுவதால் மீதமுள்ள அனைவரினதும் கடமை நீங்கிவிடும். ஒருவரும் அதை நிறைவேற்றாவிட்டால் அனைவரும் குற்றவாளிகளாக கருதப்படுவர்.
2. அதன் நிபந்தனை:
நேரமும், மக்கள் கூட்டமும் இத்தொழுகயை நிறைவேற்றுவதற்கு மிக முக்கியமான நிபந்தனையாக காணப்படுகிறது. பெருநாள் தினம் அல்லாத வேறு தினங்களில் தொழுவதோ அல்லது மூன்று பேருக்கு குறைவான எண்ணிக்கையில் இதை நிறைவேற்றுவதோ முடியாத ஒன்றாகும். அவ்வாறு நிறைவேற்றினால் இத்தொழுகை செல்லுபடியற்றதாக கருதப்படும். பயணத்திலிருப்பவர் இத்தொழுகையை தொழுவது அவசியம் கிடையாது.
3. நிறைவேற்றும் இடம்:
இத்தொழுகை மைதானம் போன்ற பரந்த நிலப்பரப்பில் மேற்கொள்வதே மிகவும் சிறந்த ஒன்றாகும்.
4. நிறைவேற்றும் நேரம்:
இது முற்பகல் வேளையில் நிறைவேற்றப்பட வேண்டிய தொழுகையாகும். அதாவது சூரியன் உதித்து ஒரு ஈட்டியளவு உயர்ந்ததிலிருந்து இதன் நேரம் ஆரம்பமாகிறது.
5. நிறைவேற்றும் முறை:
இது இரண்டு ரக்அத்துக்களை கொண்ட தொழுகையாகும். இத் தொழுகையின் முதல் ரக்அத்தில் இஹ்ராம் தக்பீரைத் தவிர அல்லாஹு அக்பர் என ஏழு முறை கூற வேண்டும். இரண்டாம் ரக்அத்தில் இஹ்ராம் தக்பீரைத் தவிர ஐந்து முறை அல்லாஹு அக்பர் எனக் கூற வேண்டும்.
முதல் ரக்அத்தி சூறதுல் பாதிஹாவிற்குப் பிறகு அல்குர்ஆனின் ஐம்பதாம் அத்தியாயத்தையும், இரண்டாம் ரக்அத்தில் சூறதுல் பாதிஹாவிற்குப் பிறகு ஐம்பத்தி நான்காம் அத்தியாயத்தையும் ஓதிக்கொள்ள வேண்டும்.
6. சொற்பொழிவு:
பெருநாள் தொழுகையில் முதலில் தொழுகை நடத்திவிட்டு, அதன் பிறகு இமாம் உரை நிகழ்த்த வேண்டும். இத் தொழுகையை தவறவிட்டவர்கள் திரும்ப தொழுதுகொள்வது போல் சொற்பொழிவும் திரும்பவும் நிகழ்த்தப்படுவதில்லை.